திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு கடைசி வரை பலிக்காது என்று சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயராமன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள் என்று தெரிவித்தார். பெரும்பான்மையுடன் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமியை, ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளது கண்டனத்திற்குரியது என்றும், மைனாரிட்டி ஆட்சி செய்தது திமுகதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிரிந்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் தேவைப்படும்போது ஒன்று கூடுவோம் என்றும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஸ்டாலின் அவசரப்படுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஸ்டாலின் கனவு காண்பதாகவும், அது கடைசி வரையிலும் பலிக்காது என்றும் கூறினார். நீண்ட வருடங்களாக திமுக தலைவராக முயற்சிக்கும் ஸ்டாலினால் அது முடியவில்லை என்றும், அவர் எப்படி முதலமைச்சராக போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பொள்ளாச்சி ஜெயராமனின் விமர்சனத்திற்கு கருத்துக்கூறி தமது தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.