மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் 80 பேரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்பு அழைப்பின்பேரில் ஆலோசனையில் பங்கேற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு, கூட்டம் தொடங்கும் முன் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை தொடர்பான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தலுக்கு தயாராகும் வகையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கூட்டத்தை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம். தமிழகம் முழுவதும் 12,617 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் கிராம சபை கூட்டத்திற்கான பயணம் தொடங்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி என செய்தி வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி கொள்கை கூட்டணியா? அல்லது கொள்ளைக் கூட்டணியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.