மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அச்சடிக்கப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டிக்கு கிடைத்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகையில், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என சிபிஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவராலும் நம்ப முடியாதபடி இருக்கிறது எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை நீர்த்துப் போக வைக்க அரசியல் பின்புலத்தோடு ரிசர்வ் வங்கியே துணை போகிறதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்த வங்கியில் இருந்து சேகர் ரெட்டி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றார் என்ற அடிப்படை தகவலைக்கூட ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மோசமான தோல்வி அடைந்துள்ளதை நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, சிபிஐக்கு உரிய தகவல்களை அளித்து, சேகர் ரெட்டி மீதான நடவடிக்கைகள் நீர்த்து விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.