ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி, மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்பது புதுமொழி என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 3ஆவது நாளாக தஞ்சை அன்னப்பன்பேட்டையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக, அன்னப்பன்பேட்டையில் காவிரி உரிமை மீட்புக் கொடியை ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் நடைபயணமாக மெலட்டூர், திருக்கருகாவூர், களஞ்சேரி,சாலியமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை வழியாக இன்று மாலை திருவாரூர் மாவட்டம் சென்றடைகிறார். இன்றைய காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
காலை நடைபயணம் தொடங்கிய நிலையில் பகல் 12 மணி அளவில் கொட்டும் மழையில் விவசாயிகள் மத்தியில் ஸ்டாலின் பேசினார். அப்போது மத்திய அரசு தூங்குவதை போல நடிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி, மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்பது புதுமொழி என்றார்.