விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தீபாவளி பண்டிகைக்காக தயாராகும் உலகப்புகழ் பெற்ற பால்கோவாவின் விற்பனை தற்போது ஆன்லைன் மூலமாக அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த சுற்றுலா தலமாகவும் தமிழகத்தின் முத்திரை சின்னமாகவும் விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றுமொரு சிறப்பு உலகபுகழ் பெற்ற பால்கோவா. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்ரீ ஆண்டாளை தரிசித்து செல்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்களோ அதே அளவிற்கு இங்கு தயாராகும் பால்கோவாவை வாங்கி செல்வதை பெருமையாக கருதுகிறார்கள். ஆகையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் எங்கு பார்த்தாலும் பால்கோவா கடைகள் காணப்படுகின்றது.
இங்கு தயாராகும் பால்கோவா சுவையாக தனிச்சிறப்புடன் இருப்பதற்கு காரணம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடிவாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளத்தால் இப்பகுதியில் உள்ள கறவை மாடுகளுக்கு மலை பகுதியில் விளையும் பசுமையான புல் உணவாக தரப்படுகிறது. மலைபகுதியில் விளையும் புல்களை உண்பதால் மாடுகளில் இருந்து பெறப்படும் பால் சுத்தமாகவும் கட்டியாகவும் உள்ளது. மேலும் இங்கு தயாராகும் பால்கோவா வணிகத்திருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகிறது.
கடந்த 1௦௦ ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், அதிக அளவில் மாடுகள் வளர்கப்பட்டன. இந்த மாட்டில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான பாலை பதப்படுத்த வைக்க முடியாத சூழ்நிலையால் பாலை காய்ச்சி அதை உணவாக சாப்பிடும் நிலை உருவானது. காலபோக்கில் இதுவே பால்கோவா தயாரிக்க காரணமாக அமைந்தது. முதலில் குடிசை தொழிலாக செய்துவந்த இத்தொழிலே காலபோக்கில் வளர்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாறியுள்ளது.
பக்குவமாக பாலை காய்ச்சி சரியான அளவில் சீனி அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து இதமான சூட்டில் பதமாக கிண்டி தயாரிக்கப்படும் பால்கோவா, பால் அல்வா ஆகியவை மிகவும் சுவையாகவும் நல்ல ருசியாகவும் இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பால்கோவா ,மற்றும் பால்பேடா ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கும் அனுப்பபடுகிறது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தற்போது வாடிக்கையாளர்கள் எளிதில் பெறக்கூடிய வகையில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு டோர்டெலிவரி செய்யப்படுவதாகவும் தீபாவளி காலம் என்பதால் வழக்கத்தை விட பால்கோவா அதிகளவில் தயாரிக்கப்படுவதால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.