அதிசயம் ஆனால் உண்மை: பாகனுடன் பேசும் கோயில் யானை !
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோவிலின் யானை ஆண்டாள். இந்த யானை தனது குறும்புச் செயல்களால் பக்தர்களை கவர்ந்து வந்த நிலையில், தற்போது ஆண்டாள் தனது பாகனுடன் சாலையில் நடந்தவாறே அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1986ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் யானை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 36 ஆண்டுகளாக கோயில் திருப்பணிகளை ஆண்டாள் சிறப்பாக செய்து வருகிறது. நவராத்திரி விழாவில் ஆண்டாளின் பங்கு அளப்பரியது.
சுட்டியாக சுறு சுறுப்புடன் இருக்கும் ஆண்டாள், ஆர்கன் வாசிப்பது சலங்கை அணிந்து ஒற்றை காலில் நொண்டி அடிப்பது என பல அறிய செயல்களை செய்து பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும். பொதுவாக யானை பாகன்கள் தாங்கள் வளர்க்கும் யானைகளுக்கு மலையாளத்திலேயே உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள். அதைக் கேட்டு, பாகன் சொல்படி யானைகள் நடக்கும்.
ஆனால் ஆண்டாளின் பாகன் ராஜேஷ் தமிழில் கேள்விகளைக் கேட்க அதற்கு ஆண்டாள் ஆம், இல்லை என பதில் கூறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. யானைப்பாகன் ராஜேஷ் முன்னே நடந்து வர அவரின் பின்னே வந்த ஆண்டாள் சாலையில் நின்று கொண்டு வர மாட்டேன் என அடம் பிடிக்கிறது. உடனே பாகன் வர மாட்டியா? என கேட்க ஆண்டாளும் வரமாட்டேன் என தனக்கே உரிய பாணியில் பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகன் ராஜேஷின் கேள்விகளுக்கு, செல்லமாய் பதில் சொல்லும் யானை ஆண்டாளின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.