இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நாடாளுமனறத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேன அறிவித்தார். ஜனவரி மாத்த்தில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால், இலங்கையில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் சிறிசேனவின் சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ள ராஜபக்ச, புதிதாக உருவாகியுள்ள இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார். அவரது மகன் நமல் ராஜபக்ச மற்றும் சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50-க்கும் அதிகமானோரும் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இலங்கை பொதுஜன முன்னணி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதற்கிடையில் கொழும்புவில் உரையாற்றிய ராஜபக்ச, முந்தைய ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்தது என தெரிவித்தார். அந்த ஆட்சியில் தம்மை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ச தேர்தலை கண்டு ரணில் விக்ரமசிங்க கட்சியினர் ஏன் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை என குறிப்பிட்டார்.
19வது சட்ட திருத்தத்தின் படி அதிபருக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடவிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜபக்ச, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார். தாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், தங்கள் நடவடிக்கைகள் சரியா தவறா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் ராஜபக்ச கூறினார்.