விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதியான கதை : நியூ அப்டேட்ஸ்

விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதியான கதை : நியூ அப்டேட்ஸ்
விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதியான கதை : நியூ அப்டேட்ஸ்
Published on

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களின் ஓய்விற்குப் பின்னர் அரசியலை தேர்வு செய்கின்றனர். விளையாட்டில் வெற்றி வாகைசூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் அரசியல் வாழ்க்கை ஏற்றம் இறக்கத்துடன் தான் இருந்துவருகிறது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் அடைந்த விளையாட்டு வீரர்கள் குறித்து பார்க்கலாம்

ராணுவக் குடும்பத்திலிருந்து விளையாட்டிலும் அரசியலிலும் களம் கண்டவர் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச அளவில் சாதித்த ரத்தோர், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குறியவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவிலில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.

(ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்)

நவ் ஜோத் சிங் சித்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்தார். சுமார் 12 ஆண்டுகள் வரை பாஜகவிலிருந்து அவர் மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதிருப்தியிலிருந்த அவர் பாஜகவிலிருந்து விலகி ஆவாஸ்-இ‌-பஞ்சாப் என்ற ‌தனிக் கட்சியை சித்து தொடங்கினார். இந்நிலையில் கடந்த 2017ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அமிர்தசரஸ் கிழக்குத் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரானார்.

(நவ் ஜோத் சிங் சித்து)

‌இந்தியாவின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக இருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் அசாருதீன் போட்டியிடுகிறார்.

(முகமது அசாருதீன்)

பீகார் மாநில முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆசாத்தின் மகன் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவர். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தர்பாங் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக டெல்லி கோல் மார்க்கெட் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் முறைகேட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரடியாக குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் கீர்த்தி ஆசாத் இணைந்தார். 

(கீர்த்தி ஆசாத்)

அரசியலுக்கு வந்த மூத்த விளையாட்டு வீரர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி. காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1971 மற்றும் 1991ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். முன்னாள் நீச்சல் வீராங்கனை நஃபீசா அலி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து லக்னோவில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். அதிருப்தி காரணமாக சமாஜ்வாதியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

(நஃபீசா அலி)

தற்போது மக்களவைத் தேர்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவிலிருந்து அரசியலில் களம் காண்கிறார்.‌

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com