மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வளர்ச்சிக்கு எதிரான ‘ஸ்பீடு பிரேக்கர்’ என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இன்று மேற்குவங்கத்தில் பரப்புரை மேற்கொண்டார். சிலிகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். “மேற்குவங்கத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் உள்ளது. அவர் திதி என்ற பெயரில் இருக்கிறார். அந்தத் திதி தான் மேற்குவங்க வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்.
மேற்குவங்கத்தில் இருந்து வறுமையை ஒழிக்க அவர் விரும்பவில்லை. வறுமை ஒழிந்துவிட்டால் அவர்களது அரசியலும் முடிவுக்கு வந்துவிடும். வறுமை தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால்தான், ஏழைகளுக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு செல்ல விடுவதில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மம்தா பானர்ஜியால் தடுக்கப்படுகிறது. இந்த ஸ்பீடு பிரேக்கர் வெளியேறி, வளர்ச்சிக்கான வேகம் உருவாக வேண்டும்” என்று மோடி பேசினார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று மோடி விமர்சனம் செய்தார்.