மறைந்த ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல சசிகலாவும், தினகரனும் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்தார்.
ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த மோதல்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்கியுள்ளது. அத்துடன் கட்சி மற்றும் கொடி உள்ளிட்டவையும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிடிவி தினகரன் பேட்டியளிக்கும்போது, சின்னம் வழங்கப்படவில்லை என்றாலும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல சசிகலாவும், தினகரனும் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பக்கமிருக்கும் தொண்டர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.