எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான வளைவுகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே வைக்கப்பட்டன என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் மோதி இளைஞர் ரகு உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது என்று நீதிபதிகள் கூறினர். மேலும், சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “பொறியாளர் ரகு இறந்தது எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய வருத்தம். உண்மையாக அவர் விபத்தில் உயிரிழந்தார் என்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான வளைவுக்கும், விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது சிசிடிவி காட்சியில் தெளிவாக உள்ளது. அத்துடன் அந்த 14 வளைவுகளும் நாங்கள் அமைக்கவில்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மட்டுமே அகற்றுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள் வைத்துள்ளது அனைத்து அனுமதி பெற்றது தான்” என்று கூறினார்.