உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் அனைத்துக் கட்டங்களிலும் தனித்தனியே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மே 6 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அந்தத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர். ரேபரேலியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தி சிறப்பு பூஜைகள் செய்தார். அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து சோனியா காந்தி வாகனத்தில் ஊர்வலமாக சென்ற போது ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். சோனியா சென்ற வாகனத்தின் மீது பூமாரி பொழிந்து தொண்டர்கள் உற்சாகப்படுத்தினர். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சோனியா காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரேபரேலி தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 4 முறையும் சோனியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.