கமல்ஹாசன் வானதி சீனிவாசனுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். மேலும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர தொகுதியாக கோவை தெற்கு தொகுதி பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ச்சியாக பாஜக சார்பில் தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை ராஜவீதியில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தெப்பக்குளம் வரையில் இருசக்கர வாகனப் பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். ஸ்மிருதி இரானி மோட்டார் பைக் மூலம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் பேசிய அவர், “கமல்ஹாசன் வானதி சீனிவாசனுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற வேண்டும். அப்போது மக்களின் பிரச்னைகள் , கொள்கைகள், தீர்வுகள், குறித்து விவாதித்தால் ஆட்சி செய்யும் நிர்வாகத்திறன் யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். மேலும் திட்டங்கள் குறித்தும், மக்களுக்கு செய்யப்பட்டுள்ள சேவைகள் குறித்தும் விவாதிக்க கமல்ஹாசன் தயாரா?” எனவும் கேள்வி எழுப்பினார்.