திருச்சியில் தங்கள் அறிவுரையை மீறி தங்கை திருமணம் செய்துகொண்டதால் அண்ணன் மற்றும் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பன்னீர்செல்வம் (60). இவரது மனைவி நீலாவதி (வயது 50), மகன்கள் பால்ராஜ் (26), சின்னத்துரை (24), மகள்கள் மீரா (30), கல்பனா (வயது 23), மீனா (21) ஆகியோர் ஆவர். இதில் மீரா மற்றும் கல்பனா ஆகிய இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பால்ராஜ், தங்கை மீனா முசிறியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். காதல் வேண்டாம் என்று தனது சகோதரிக்கு அவர் அறிவுரை வழங்கினார். அறிவுரையை ஏற்க மறுத்த மீனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்துபோன பால்ராஜ் நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் நீலாவதியும் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.