தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, ஐயா 12ஆம் வகுப்புக்கும் பாஸ் போடுங்க என கேட்ட மாணவர்களிடம் முதல்வரிடம் கேட்டு பரிசீலினை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்தார்.
தமிழக துணை முதல்வரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த பள்ளி மாணவர்களில் சிலர் அவரது பேச்சின் ஊடே 'ஐயா 12ஆம் வகுப்புக்கு பாஸ் போட்டு விடுங்கய்யா' என கேட்டனர். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் 'ஏன் தம்பி வம்புதான இழுக்குற நீ' என்று பதிலளித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் மாணவ கூட்டம் ஒட்டுமொத்த குரலில் 12ஆம் வகுப்புக்கு பாஸ் போடுங்க என்று கேட்கவே, தமிழக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூடவே மாணவர்கள் விளையாட்டு மைதானம் கேட்க, தனது சொந்த செலவில் மைதானம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார். அதோடு சமயம் பார்த்து கோரிக்கைகளை வைப்பதற்கும் கமெண்ட் கொடுத்தார் துணை முதல்வர்.