சிவசேனா - பாஜக இடையிலான தேர்தல் கூட்டணி இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை விட பெரியது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா பாஜக கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக தேர்தல் உடன்பாட்டில் இழுபறி நிலவியது. இத்தனைக்கும் இருவரும் மத்தியில் கூட்டணியில் இருந்தனர். இறுதியாக, பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டு முறையே 122, 63 இடங்களை கைப்பற்றினர். தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்தனர்.
5 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போதும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக சிவசேனா அவ்வவ்போது விமர்சனங்களை முன் வைத்து வந்தது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் கூட்டணி அமைப்பதில் இருகட்சிகளிடையே இழுபறி நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பாஜக சிவசேனா இடையிலான தேர்தல் கூட்டணி குறித்து பேசிய சஞ்சய் ராவுத், “மகாராஷ்டிரா பெரிய மாநிலம். 288 தொகுதிகளை பங்கீடு செய்வது என்பது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைவிட பெரிய வேலை. பாஜக அரசுடன் கூட்டணியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், இன்றைய நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும். சிவசேனா - பாஜக கூட்டணி குறித்த கவலை எங்கள் கட்சியினரை காட்டிலும் ஊடகங்களுக்கே அதிகமாக உள்ளது.
நாங்கள் இயல்பாகத்தான் இருக்கின்றோம். தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக இருகட்சிகளின் தலைவர்கள் நல்லதொரு உரையாடலை மேற்கொண்டு வருகிறார்கள். எந்தவொரு முடிவு எடுத்தாலும் நாங்கள் உடனே ஊடகங்களுக்கு தெரிவு படுத்துவோம்” என்று கூறினார்.