காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்ஷித் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷீலா தீக்ஷித் அரசியல் வாழ்வின் 10 முக்கிய கட்டங்கள்:-
1. ஷீலா தீக்ஷித் அரசியலுக்கு வந்தது எதேச்சியாக நடந்தது. அவரது மாமனார் உமா சங்கர் தீக்ஷித் ஒரு சமூக செயற்பாட்டாளர். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட உமா சங்கர் இந்திரா காந்தி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தார். அப்போது, அமைச்சராக இருந்த உமா சங்கருக்கு ஷீலா உதவிகள் செய்து வந்துள்ளார். ஷீலா நிர்வாகத் திறமையை கவனித்த இந்திரா காந்தி அவரை ஐ.நாவின் பெண்களுக்கான ஆணையத்திற்கு இந்தியா சார்பில் அனுப்பி வைத்தார். அதுதான், அவரை அரசியலுக்குள் நுழைய வைத்தது.
2. 1970களில் இளம் பெண்கள் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.
3. 1984-89 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னவுஜ் மக்களவை தொகுதியில் எம்.பி ஆக இருந்தார். அப்போது, மக்களவை மதிப்பீட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
4. 1984-89 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐ.நா ஆணையத்தில் இந்தியாவுக்காக பிரதிநிதியாக இடம்பெற்றார்.
5. 1986-89 ஆண்டில் பிரதமர் அலுவலக இணை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் இருந்தார்.
6. பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக இயக்கங்களை தலைமையேற்று 1990இல் செயல்பட்டார்.
7. 1998 ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற அவர், 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த பதவியில் இருந்தார்.
8. 1998 முதல் 2003 வரை கோல் மார்க்கெட் சட்டசபை தொகுதி, 2008இல் புதுடெல்லி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக தேர்வானார்.
9. 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஷீலா தீக்ஷித். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
10. 2014 ஆம் ஆண்டு கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், 5 மாதத்தில் அவர் ராஜினாமா செய்தார்.