திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் தொல்லைக்கு அச்சுறுத்தியதாக கூறி, சிஐடியு சார்பில் அலுவலகத்தில் 2 மணி நேரமாக தொடர் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி நிர்வாக அலுவலர் ஜஸ்டின் ஆரோன். இவர் அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பெண் ஊழியர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்று அச்சுறுத்திய திருச்செந்தூர் செயற்பொறியாளர் மீது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலர் ஜஸ்டின் ஆரோன் மீது சட்டரீதியாக செயற்பொறியாளர் அலுவலகத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அவர் மீது அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடினர். மேலும் முறையான நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.