தவறு செய்ததால் பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. இவர் பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது இவர், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தவறு செய்ததால் பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக கட்டுக்கோப்பான கட்சி, யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவில் கனிமொழிக்கு பதில், உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.