தற்காப்பு முக்கியமில்லை.. தன்மானமே முக்கியம்: பவளவிழாவில் கமல்ஹாசன்

தற்காப்பு முக்கியமில்லை.. தன்மானமே முக்கியம்: பவளவிழாவில் கமல்ஹாசன்
தற்காப்பு முக்கியமில்லை.. தன்மானமே முக்கியம்: பவளவிழாவில் கமல்ஹாசன்
Published on

முரசொலி பவளவிழாவில் உரையற்றுவதற்கு கொஞ்சம் தயங்கியபோது, தற்காப்பு முக்கியமல்ல; தன்மானமே முக்கியம் என்று முடிவெடுத்து மேடையில் ஏறியதாக நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

முரசொலி நாளிதழின் 75 ஆம் ஆண்டு பவளவிழாவில் பேசிய கமல், “நான் கற்ற தமிழ் எல்லாம் செவி வழியே கற்றவைதான். செவிவழி கற்றத்தில் இரண்டாவது குரல் கருணாநிதியுடையது. ஏன் இரண்டாவது என்று சொல்கிறேன் என்று சொன்னால் நான் கேட்டு வளர்ந்த முதல் குரல் நடிகர் சிவாஜியுடையது. பிறகுதான் தெரிந்துகொண்டேன், சிவாஜியின் குரலில் கேட்ட எழுத்துக்கள் அனைத்தும் கருணாநிதி எழுதியது என்பதை. இந்த விழாவில் ரஜினியோடு சேர்ந்து நானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடைக்கு செல்லாமல் இருந்துவிடலாம் என்றிருந்தேன். அதன்பிறகுதான் யோசித்துப் பார்த்தேன். அப்போது முடிவு செய்தேன். “தற்காப்பு அல்ல முக்கியம்; தன்மானமே முக்கியம்” என்ற முடிவுக்கு வந்தேன் என்றார்.

மேலும், “என்னைக் கேட்கிறார்கள், அந்த மேடைக்கு சென்று கழகத்தில் சேரப் போகிறீர்களா என்று. சேர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் 1983 ஆம் ஆண்டே சேர்ந்திருப்பேன். அப்போது கருணாநிதி எனக்கு ஒரு தந்தி அனுப்பினார், “நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக்கூடாது?” என்று. அந்த தந்தியை வெளியே காட்டவும் தைரியமில்லை; அதற்கு பதில் அனுப்பவும் தைரியம் இல்லை. ஏன் இன்றுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. அவரும் இன்றுவரை அதைப்பற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் விமர்சித்தும் கிண்டலடித்தும் பேசிக் கொண்டவர்களெல்லாம் ஒருமித்து ஒரே மேடையில் இருக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை நானும் பயில இங்கு வந்திருக்கிறேன்” என்றும் கமல்ஹாசன் கூறினார்.

இறுதியாக, “திராவிடம் ஒழிந்தது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜனகனமன... உள்ளவரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது தமிழகம் அல்லது தென்னகம் என்பது மட்டுமல்ல. நாடு தழுவியது இந்த திராவிடம். சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து நகர்ந்துவந்து இங்கு தென்முனையில் நிற்கிறது. நான் சொல்வதை இந்த அரங்கம் மட்டுமல்ல; இந்த நாடும் நினைவில் வைத்துக் கொள்ளும். நான் சொல்வது ஓட்டின் எண்ணிக்கையை அல்ல; மக்களின் சக்தியை” என்று கமல் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com