’’திமுக ஆட்சியில் நடக்கும் தேர்தலின்போது தான் ஆள் கடத்தல் நடக்கிறது” - சீமான் பேட்டி

’’திமுக ஆட்சியில் நடக்கும் தேர்தலின்போது தான் ஆள் கடத்தல் நடக்கிறது” - சீமான் பேட்டி
’’திமுக ஆட்சியில் நடக்கும் தேர்தலின்போது தான் ஆள் கடத்தல் நடக்கிறது” - சீமான் பேட்டி
Published on

"ஒரே நாடு ஒரே தேர்தல்" சாத்தியமற்றது. மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாடு சட்டமன்றத்தையும் ஆளுநர் முடக்க நேரிடும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது அவரின் ஆசையாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ள தமிழகத்தில் அதற்கான முகாந்திரம் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மஹாலில் நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் பேட்டியில் கூறியதாவது... ‘’மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது சர்வாதிகாரப்போக்கு.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்காலத்தில் நடந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படும். அதிமுக ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆட்களைக் கடத்தவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் நடக்கும் தேர்தலின்போது ஆள் கடத்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடத்தி அடைத்துவைத்து மிரட்டுகிறார்கள். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கருத்துரிமையை முடக்குகிறார்கள்.

"ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பது சாத்தியமற்றது. மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் மாநில தேர்தலையே பல கட்டமாக நடத்துகிறார்கள். ஒரு மாநிலத்தில் பிரச்னை என வந்தால் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்தமுடியுமா ? தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்வதை விட்டுவிட்டு "ஒரே நாடு ஒரே தேர்தல்" என சொல்கிறார்கள்.

இந்தியவில் பயன்படுத்தும் வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பான் வாக்குப்பதிவு முறையில்தான் தேர்தலை நடத்துகிறது. உலகத்தில் இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும்தான் மெஷினை நம்பி வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்குவங்கம் போல தமிழகத்திலும் ஆளுநரால் சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி சொல்வது அவருக்கான ஆசை. பெரும்பான்மையான இடங்களை வென்று நடக்கும் ஆட்சியை கலைக்க தமிழகத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது 6 மாதத்தில் ஆட்சி மாறும் என்று சொன்னதைப்போல இப்போது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

ஆர்.கே நகரில் 80 கோடி வரை பணம் கொடுத்தார்கள் என சொல்லி தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தலை நடத்தியபோது புகாருக்கு உள்ளானவரே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தேர்தலில் பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என சட்டம் கொண்டு வரவேண்டும். பாஜகவை எதிர்த்து திமுக குரல் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தில் பல பேர் திகாரில்தான் இருக்கவேண்டும்.

மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரகூடாது எனச் சொல்கிறார்கள். ஆனால் மத அடையாளங்களுடன் நாடாளுமன்றத்திற்கு செல்வது என்ன நியாயம்?.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நோய்த்தொற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி பாக்கியை தராத மத்திய அரசுக்கு மாநிலத்திலிருந்து ஜிஎஸ்டி வரி கட்டுவதை நிறுத்த வேண்டும். மாநிலத்தில் இருந்து நிதி செல்வதை தடுத்தால் மத்திய அரசு தானாக மாநில உரிமைகளுக்காக இறங்கிவரும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com