சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என அவரது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில், எழுத்துப்பிழையால் தவறு நேர்ந்துள்ளதாகவும், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் கடந்த நிதியாண்டில் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியானால் ஒரு நாளைக்கு அவரது வருமானம் 2 ரூபாய் 77 பைசா தானா? என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் எழுத்து பிழை ஏற்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாணப் பத்திரத்தை அளிக்க உள்ளனர்.