“சூழலியல் போராளி முகிலன் எங்கே?” - சீமான் கேள்வி

“சூழலியல் போராளி முகிலன் எங்கே?” - சீமான் கேள்வி
“சூழலியல் போராளி முகிலன் எங்கே?” - சீமான் கேள்வி
Published on

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை உடனடியாக மீட்க வேண்டும் என ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மண்ணுரிமைப் போராட்டக்களத்தில் முதன்மையாய் நிற்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனைக் காணவில்லையென வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 

கடந்த பிப்ரவரி 15 அன்று சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றவருக்கு அதன்பிறகு என்ன நிகழ்ந்தது என்கிற எந்த விபரமும் இந்த நொடிவரை தெரியவில்லை. தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு மணித்துளியும் அவருக்கு எதுவேனும் நிகழ்ந்திருக்குமோ? என்கிற பதைபதைப்பும், பதட்டமும் தொற்றிக்கொள்கிறது. 

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டிருக்கிறார் என்றும், தலைமறைவாக இருக்கிறார் என்றும் பல்வேறு விதமாக முன்வைக்கப்படும் அனுமானங்களினாலும், யூகங்களினாலும் அவரது குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கும், பரிதவிப்பு நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.
 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு நிகழ்த்திய வன்முறையையும், படுகொலையினையும் பத்திரிகையாளர் மன்றத்தில் அம்பலப்படுத்தியப் பிறகு அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களைத் தோற்றுவிக்கிறது. 

சென்றமுறை கைது செய்யப்பட்ட போது சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார். இந்த முறை திட்டமிட்டு அவரது செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அவருக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார்? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டியதும் அரசின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com