இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர் இருவரையும் விடுதலை செய்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் அமீர், சீமான் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சீமான், அமீர் இருவரும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சீமான், அமீர் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த நீதிமன்றம், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறியது. "கடந்த 2008-ல் நடத்தப்பட்ட கூட்டம் தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும் ஈழத் தமிழர்களின் துயரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும்தான் இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராக கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை" என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.