“என்னதான் பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கடிக்கத்தான் செய்யும்” என்று நம் ஊரில் சொல்வதுண்டு. அப்படியான சம்பவம் குறித்த வீடியோ ஒன்றுதான் பார்வையாளர்களை திடுக்கிடச் செய்திருக்கிறது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என கூறிவந்தாலும் கொடிய விஷமுள்ள பாம்புகளையே செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்களும் இதே உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதன்படி பாம்பு என்றாலே நடுநடுங்க வைக்கும் அளவுக்கு உணர்வை கொண்டவராக இருந்தால் இங்கே இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை சற்று ஜாக்கிரதையுடனேயே காணுங்கள். ஏனெனில் செல்லமாக தான் வளர்த்து வந்த ஒரு மலைப்பாம்பு அதன் உரிமையாளரையே தாக்கிய சம்பவம் குறித்துதான் பார்க்கப் போகிறோம்.
ALSO READ:
Daily Loud என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் அந்த ஒரு நிமிட காணொலியில், பெண் ஒருவர் தான் வளர்த்து வந்த மலைப்பாம்பை அது இருக்கும் கேஜ்-ல் இருந்து எடுக்க முயன்றிருக்கிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பாம்பு அந்த பெண்ணின் கையை இறுக கவ்வியதோடு முழுவதுமாக தன் உடலாலும் சுற்றிக் கொண்டுவிட்டது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் சில அதிர்ந்துப்போய் மலைப்பாம்பின் தாக்குதலில் இருந்து பெண்ணை மீட்க முயற்சித்திருக்கிறார்கள்.
பாம்பு கிடுக்குப்பிடியாக பெண்ணின் கையை பிடித்திருந்தபடியால் அவரது கை பர்ப்பிள் நிறத்திற்கு மாறி கையில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியிருக்கிறது. அதன் பிறகு ஒருவழியாக பாம்பின் பிடியில் இருந்து அப்பெண் மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்ததோடு, “பாம்புகளை செல்லப்பிராணியாக ஏன் வளர்க்கக் கூடாது என்பதற்கு இதுதான் காரணம்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 80 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவை பல்லாயிரக் கண்கானோர் ஷேர் செய்திருக்கிறார்கள்.