எம்.பி,எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வந்தப் போது, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது அரசியல்வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட 1,581 வழக்குகள் நிலுவையிலுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
இந்த 1,581 வழக்குகளில், கடந்த ஒரு வருடங்களில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது மற்றும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், விரைவு நீதிமன்றங்கள் பாணியில், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான கிரிமினல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள 1581 வழக்குகளில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றங்களை பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.