ராஜஸ்தானுடனான போட்டியை செய் அல்லது செத்துமடி என்ற ரீதியிலேயே பார்த்தேன் என்று ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு மணீஷ் பாண்டேவும், விஜய் சங்கரும் துணை புரிந்தனர். இந்தப் போட்டியில் 3 ஓவர்களை வீசிய விஜய் சங்கர் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். பின்பு இக்கட்டான கட்டத்தில் பேட்டிங் ஆடி 52 ரன்களை சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டி முடிந்த பின்பு பேசிய மணீஷ் பாண்டே "எங்கள் இருவருக்குமே தெரியும் நாங்கள் இந்தக் கட்டத்தில் நிலைத்து நிற்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று. நான் இந்தத் தொடரில் மிக சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. இந்தப் போட்டி வாழ்வா? சாவா? என எடுத்துக்கொண்டேன், அதனால்தான் அத்தகைய ஆட்டத்திறனை வெளிப்படுத்தினேன். அணிக்காக சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
இதனையடுத்து பேசிய விஜய் சங்கர் "கடைசியாக நடைபெற்ற இருபோட்டிகளிலும் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றுவிட்டோம். இப்போது இந்த வெற்றி நம்பிக்கையை கொடுக்கும். களத்துக்கு வரும்போது செய் அல்லது செத்துமடி என்ற முடிவில்தான் வந்தேன். இனி வரும் போட்டிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம் அந்த நம்பிக்கயை இந்த வெற்றி கொடுத்து இருக்கிறது" என்றார்.