மரணமடைந்த தந்தை, மகனுக்கு காவல் நிலையத்தில் பாலியல் கொடுமையா ? - வெளியான அதிர்ச்சி தகவல்

மரணமடைந்த தந்தை, மகனுக்கு காவல் நிலையத்தில் பாலியல் கொடுமையா ? - வெளியான அதிர்ச்சி தகவல்
மரணமடைந்த தந்தை, மகனுக்கு காவல் நிலையத்தில் பாலியல் கொடுமையா ? - வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் உயிரிழந்த விவகாரத்தில் தந்தைக்கும், மகனுக்கும் காவல்நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வணிகர்களும், தந்தையும், மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19ம் தேதி கைது செய்து விசாரணைக்காக ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஜூன் 22ம் தேதி பென்னிக்ஸும், மறுநாள் அதிகாலையிலே ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் தான் கடுமையான தாக்கி கொன்றுவிட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக தி பெடரல் சிறப்பு செய்தி பதிவு செய்துள்ளது. பென்னிக்ஸின் நண்பர் ராஜ்குமார் பெடரல்-க்கு அளித்த பேட்டியில், “20 ஆம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறைந்தபட்சம் 7 முறை தந்தையும், மகனும் லுங்கிகளை மாற்றினார்கள். அவர்களது ஆசனப் பகுதியில் இருந்து ரத்தம் கசிந்ததன் காரணமாக உடல் ஈரமாக இருந்தது. சாத்தான்குளம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உங்களது வாகனத்திலே வாருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது ஆடைகள் நன்றாக கிழிந்து இருந்தது. உடலில் ரத்தம் படிந்திருந்தது. ஆசனப்பகுதியில் கடுமையான வலி இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு உடனடியாக மாற்று லுங்கி கொடுத்தோம். வலிக்காமல் இருக்க எங்களது காரின் சீட்டில் துணிகளை கீழே போட்டோம். ” என்றார்.

“இருப்பினும், அவர்களுக்கு ரத்த அழுத்தும் அதிகமாக இருந்ததால் உடல்தகுதி சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். மருத்துவ சோதனையில் ரத்த அழுத்தமானது தந்தைக்கு 192, மகனுக்கு 184 ஆக இருந்தது” என்றார் அவர்களது வழக்கறிஞர் மணிமாறன்.

மேலும், “தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீக்ஸ் இருவரும் ரத்த அழுத்தத்தை குறைக்க ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். காலை 7.05 முதல் 11.15 வரை மூன்று சோதனை செய்தனர். அவர்களது மருந்துகளும், ஊசிகளும் கொடுக்கப்பட்டன. ரத்த கசிவு நிற்பதற்கு மருந்து கொடுக்குமாறு காவல்துறையிடம் கேட்டோம். ஆனால், மருந்து கொடுக்காமலே ரத்த கசிவு நின்றுவிடும் என்றனர்” என்று கூறினார் மணிமாறன்.

பலமுறை பரிசோதனை செய்தும் அவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை, இருந்தாலும் அவர்கள் உடல்நிலை சீராக இருக்கிறது என சான்றிதழ் தருமாறு மருத்துவர்களிட சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் பெற்றபின்னர் இருவரையும் அதே காரில் அழைத்துக்கொண்டு மாஜிஸ்திரேட் சரவணனின் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு மாஜிஸ்திரேட்டிடம் நடந்த உண்மைகளை கூறுமாறு பென்னீக்ஸிடம் தாங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நண்பர்களும் அப்போது அருகே இருந்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். பென்னிக்ஸுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டபோது அவரைச் சுற்றி 4 காவலர்கள் இருந்ததாகவும், அவர்கள் தந்தை மகன் இருவரையும் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கூறிய ராஜ்குமார், “தான் காரணமின்றி தொடர்ந்து தாக்கப்படுவதாக பென்னீக்ஸ் தெரிவித்தார். அது வெளிப்புற காயத்தைவிட மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். அத்துடன் தனது தந்தையை பார்த்துக்கொள்ளுமாறும், விசாரணையில் நடந்த கொடுமைகளை அவரிடம் கூற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்” என்றார்.

இந்தப் பிரச்னைகள் அனைத்து ஜூன் 18ஆம் தேதி இரவு காவல்துறையினர் கடைகளை மூடுமாறு கூறிய போது ஏற்பட்டதாகவும், ஒருவர் தவறுதலாக பேசிய வார்த்தைகளால் ஏற்பட்டதாகவும் பென்னிக்ஸின் மற்றொரு நண்பரான ராஜா கூறியுள்ளார். “ஜெயராஜை ஜூன் 19ஆம் தேதி போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். உடனே பென்னீக்ஸ் காவல்நிலையம் சென்று அதுதொடர்பாக விசாரித்தார். அப்போது அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக பென்னீக்ஸ் போலீசாரால் தாக்கப்பட்டார்” என்று ராஜா தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஜெயராஜை காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீஸார் காலை பிடித்து இழுத்து சுவற்றில் தள்ளியதாகவும், பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நண்பரான ரவி கூறினார். ரவி மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் இந்த சம்பவங்களை பார்த்ததால், அவர்களை காவல்நிலையத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் கூறியதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் இரவு 11 மணி மணியளவில் ஜெயராஜ் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட, ரவிக்கு மற்றும் ராஜ்குமார் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள் உள்ளே விசாரணை சென்றுகொண்டிருப்பதாக தடுத்துள்ளனர்.

அப்போது பென்னீக்ஸ் ரத்தம் வடிய நிர்வாணமாக இருந்ததாகவும் போலீஸார் தங்களை வெளியே தள்ளியதாகவும் ரவி குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் இருவரையும் 20ஆம் தேதி காலையில் தான் பார்க்க முடிந்ததாகவும், ஆனால் இரவு அவர்கள் உதவி கேட்டு அழுததை அங்கிருந்தவர்கள் கேட்க முடிந்ததாகவும் ரவி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com