சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 5 காவலர்களில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைது நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த காவலர் முத்துராஜ், காவல்துறையின் விசாரணை அழைப்பை நிராகரித்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
சிபிசிஐடி காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், முத்துராஜ் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இதனிடையே, காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள சிபிசிஐடி, அவரை கைது செய்யும் பணியை முடுக்கியது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் காவலர் முத்துராஜ் பிடிபடுவார் என சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தேடப்பட்ட வந்த முத்துராஜ் கைது செய்யப்பட்டார். இதனால், தந்தை - மகன் வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட முத்துராஜை சிபிசிஐடி போலீசார் மூலம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.