சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.
கொரோனா பாதிப்புகளையும், பொதுமுடக்கம் இன்னல்களையும் தாண்டி தமிழகத்தை அதிர்வலைகளுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது சாத்தான்குளம் இரட்டை மரண சம்பவம். நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் கொடூரங்கள், கொடூரன்களின் கோர முகம் என ஆயிரம் தவறுகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், பொதுமுடக்கத்தை மீறி சில நிமிடங்கள் கடையை திறந்ததற்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் சாத்தான்குளத்தில் சடலமாக மாறிய துயரம் நிகழ்ந்துள்ளது. கணவனை இழந்து மனைவியும், தந்தையை இழந்து மகள்களும் மற்றும் சகோதரரை இழந்து 3 தங்கைகளும் தத்தளித்துக்கொண்டிருந்தபோது அந்த குடும்பத்திற்காக சாத்தான்குளம் மக்கள் பொங்கி எழுந்தனர். அரசியல் தலைவர்களின் கண்டனங்கள், அடுத்தடுத்த போராட்டங்கள் என தந்தை, மகன் மரணம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்த காவல்துறை, தந்தையும் மகனும் அழைத்துச்செல்லும் போது கீழே விழுந்து புரண்டதால் ஊமைக்காயம் ஏற்பட்டதாக கூறியது. அதுவே முதல் தகவல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உண்மைகளை மறைப்பதாகவும், தந்தையையும் மகனையும் அவர்கள் இரவு முழுவதும் அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும், இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அடுத்தடுத்த திருப்பமாக ஆதாரங்கள் வெளியாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தின் மொத்த காவலர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சாத்தான்குளம் சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் பிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடத்தவும், அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவு செய்யவும் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டார். அதன்படி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வழக்கை விசாரிக்க, அப்போது அவரிடம் சாட்சியளித்த பெண் காவலர் ரேவதியை காவல்துறை உயரதிகாரிகள் மிரட்டியதாக தகவல் வெளியாகியது. அத்துடன் மாஜிஸ்திரேட்டை மிரட்டும் வகையில் காவல்துறையினர் பேசியதாக திடுக்கிடும் தகவல் வந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் காவல்துறையினர் அழைத்துச்சென்ற தினத்தில் இருவரும் கீழே விழுந்து உருளவில்லை என்பதும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்பதும் உறுதியானது. அத்துடன் ஜெயராஜ் முதலில் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டதும், பின்பு நண்பர்களுடன் பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றதும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையின் குறிப்புகளில் பெரும் முரண்பாடு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி காவலர் ரேவதி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த தகவலில், இரவு முழுவதும் தந்தையும் மகனும் அடித்து சித்தரவதை செய்யப்பட்டனர் என்பதும், காவல்நிலையத்தின் மேசை மீது இருந்த லத்தியில் ரத்தக்கரை இருந்ததும் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே தந்தை மகன் உடுத்தியிருந்த ஆடையில் ரத்தக்கரை இருந்ததாகவும், அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காயங்கள் இருந்ததாகவும், குறிப்பாக அமரும் இடத்தில் கொடுங்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது. இது ஒருபுறம் இருக்க வழக்கை சிபிஐ தரப்புக்கு மாற்றியும், சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப் படும் வரை, வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் குழு, சாத்தான்குளத்தில் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் மேலும் கூடுதலாக ஒரு ஆடியோ தகவல் சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்திலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளைச்சிறைக்கு அழைத்துச்செல்லப்படும்போது தனியார் காரில் சென்ற பென்னிக்ஸ் நண்பர் மற்றும் காரை ஓட்டிய ஓட்டுநர் ஆகியோரின் ஆடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் கூறப்படும் தகவலின்படி, பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையும் ரத்தம் வடியும் காயங்களுடன் 110 கிலோ மீட்டர் காரில் அமர்ந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் அமர்ந்திருந்த போர்வையில் ரத்தக்கரை படிந்திருந்ததாகவும், அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போது காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வாகனத்தில் இரண்டு காவலர்கள் உடனிருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.