சசிகலாவின் பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை நிராகரித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா சார்பில் கர்நாடக சிறைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் பரோல் மனுவை, தொழில்நுட்ப காரணங்களால் கர்நாடக சிறைத்துறை நிராகரித்துள்ளது. சசிகலா தாக்கல் செய்துள்ள மனுவில், பரோல் அளிக்கத் தகுந்த ஆவணங்கள் இல்லை எனக் கூறியுள்ள கர்நாடக சிறைத்துறை, கூடுதல் தகவல்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே சசிகலா சார்பில் விரைவில் புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.