“வெளியிலிருந்து ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறதோ?” - சசிகலா தரப்பு வழக்கறிஞர்

“வெளியிலிருந்து ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறதோ?” - சசிகலா தரப்பு வழக்கறிஞர்
“வெளியிலிருந்து ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறதோ?” - சசிகலா தரப்பு வழக்கறிஞர்
Published on

ஆணையம் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் நாங்கள் மனுத்தாக்கல் செய்து விசாரணை செய்வோம் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். சிகிச்சை நாட்களில் உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை என மருத்துவர்களே சொன்னார்கள். அப்படியென்றால் ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமா? இல்லையா? 75 நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என 3 மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “அமைச்சர் என்ற அடிப்படையில் சி.வி.சண்முகம் கருத்து சொல்கிறார். விசாரணை ஆணையம் அவரின் கருத்தையும் கருத்தில் கொண்டு விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு ஏதும் கிடையாது. ராஜிவ் கொலையில் ஜெயின் கமிஷன் ஒருபக்கம் விசாரித்தாலும் சிபிஐ மறுபக்கம் விசாரித்ததுபோல் சிலபேரை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மையெல்லாம் வெளிவரும். இவர்களிடம் சும்மா கூப்பிட்டு ஒரு வாக்குமூலம் வாங்குவதால் உண்மை வராது. கூட்டிட்டு போய் நன்றாக ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “காவல்துறை, சிபிஐ, என எதையும் வைத்து விசாரித்து கொள்ளட்டும். விசாரணை நடைபெறும்போது நிர்பந்தம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சட்ட அமைச்சராக இருந்தாலும் சாமானியராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான். வெளியிலிருந்து ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எனக்கு எழுந்துள்ளது. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். சட்ட அமைச்சர் கூறியதை எதிர்கொள்ள நாங்கள் தயார். 

சட்ட அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையின்போது மருத்துவமனையில்தான் இருந்துள்ளார். ஒபிஎஸுக்கு எதிராக பல பதில்கள் கொடுத்துள்ளார். அமைச்சர்களுக்கு தனியாகவோ, எம்.எல்.ஏக்களுக்கு தனியாகவோ சட்டம் இல்லை. நிர்மலா பெரியசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை ஆணையம் விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மனுத்தாக்கல் செய்து விசாரிப்போம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com