கருத்துக்கணிப்பில் மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த 8 சதவிகித வாக்குகள், 20 சதவிகிதமாக மாறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் கிச்சா ரமேஷுக்கு ஆதரவாக, சரத்குமார் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், சௌகார்பேட்டை, யானை கவுனி பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், அரசியல் தற்போது கார்ப்பரேட் தொழில் போல மாறியுள்ளது என்றும் தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்புகள் வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், “நானும் ராதிகா சரத்குமாரும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டால் அந்த தொகுதியில் மட்டும் ஒட்டு மொத்த உழைப்பை போடவேண்டிய சூழல் ஏற்படும். தற்போது பண அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனைத்து தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளும் நோக்கத்தில் போட்டியிடவில்லை. 1996ல் 40 தொகுதி கேட்டிருந்தால் கருணாநிதி கொடுத்திருப்பார். நான் அவ்வாறு செய்யவில்லை. எங்கள் கூட்டணியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பது இலக்கு” என்று அவர் பேசினார்.