எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நீக்கப்பட்ட வீரர், நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ரிவாட்டியா பகுதியை சேர்ந்தவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்தவர். இவர் 2017ஆம் ஆண்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உணவின் தரம் குறித்து வீடியோ பதிவை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் அவர், “எல்லையில் இருக்கும் படை வீரர்களுக்கு அளிக்கும் உணவு சரியான தரத்தில் வழங்கப்படுவதில்லை. அரசு உரிய பொருட்களை அளித்தாலும் அதனை உயர் அதிகாரிகள் விற்றுவிடுகின்றன” என குற்றம்சாட்டி இருந்தார். அதனையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் பாதுகாப்பு படையிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நீக்கப்பட்ட துணை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னை பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் சுயேட்சை வேட்பாளராக மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் களமிறங்கவுள்ளேன். என்னுடைய நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல.
மோடியின் அரசு துணை ராணுவ படை வீரர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டுவதே எனது நோக்கம். ராணுவ வீர்ரகளுக்கு எவ்வித பயனும் செய்யாமல் அவர்களின் பெயரில் பிரதமர் ஓட்டு கேட்கிறார். மேலும் நான் இன்னும் சில நாட்களில் வாரணாசி சென்று அங்குள்ள முன்னாள் ராணுவ படை வீரர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்களின் உதவியுடன் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன்” எனக் கூறினார்.
முன்னதாக, துணை ராணுவ படையிலிருந்து தன்னை நீக்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.