சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாடுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி தன்னுடைய புள்ளிப் பட்டியலை தொடங்கியது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். டெல்லி அணியுடனான போட்டியிலும் ருதுராஜ் சிறப்பாக விளையாடவில்லை.
இது குறித்து பேசிய ஸ்டீபன் பிளமிங் "இப்போது அணி சமநிலையாக இருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் ஒரு சிறந்த வீரர். முதல் போட்டியில் அவர் மிகச் சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இன்றையப் போட்டியில் மைதானம் பேட்டிங்க்கு சாதமாக இல்லை. பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டே ரன்களை சேர்த்தனர். இந்தப் பிட்ச் 220 ரன்களை அடிக்க கூடியதாக இல்லை. இது வித்தியாசமானது" என்றார்.
மேலும் பேசிய அவர் "ருதுராஜ் ஒரு இளம் வீரர். கடந்த ஐபிஎல்லில் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அதற்கு ஏற்றார் போல அவரும் சிறப்பாக விளையாடினார். எங்களை பொறுத்தவரை அணியில் ஒரு வீரரை சேர்க்கிறோம் என்றால் அவர் மீது நம்பிக்கை வைப்போம். அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வாய்ப்புகளை வழங்குவோம்" என்றார் ஸ்டீபன் பிளமிங்.