நேட்டோ நாடுகளுடன் இணையும் உக்ரைனை கண்டித்து அதன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
6 மாதங்களாகியும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆனால் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக ரஷ்ய மக்கள் பலரும் உக்ரைன் போர் நடவடிக்கையை கைவிடுமாறு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், காதல் எப்போதும் வெறுப்பை வெல்லும் என்பதை குறிப்பிடும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த நபர் உக்ரைன் பெண்ணை காதலித்து கரம்பிடித்திருப்பதன் மூலம் உணர்த்தியிருக்கிறது.
அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவுக்கு அருகிலுள்ள திவ்யா ஆசிரம கரோட்டாவில் ரஷ்ய-உக்ரேனிய ஜோடி திருமணம் செய்துள்ளது உண்மையிலேயே காதல் எல்லா எல்லைகளையும் தாண்டியதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இமாச்சலத்தின் உள்ளூர் மக்கள் சூழ்ந்து நாட்டுப்புற பாடல்கள் பாட, ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி நோவிகோவ் உக்ரைனைச் சேர்ந்த எலோனா பிரமோகாவை இந்து முறைப்படி ஆடை அலங்காரம் செய்து கரம் பிடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக செர்ஜியும், எலோனாவும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் இந்தியாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டது பலரிடத்திலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.