தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சான்றிதழ் அளிக்க வலியுறுத்தி 7 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.
கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது ஒன்றாவது, இரண்டாவது மற்றும் 11-வது வார்டுகளில் மனுதாக்கல் செய்த திமுகவினரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக இருந்ததால் மூவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட 3 சுயேச்சைகளும் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் அலுவலகம் முன்பு திடீரென மயங்கி கீழே விழுந்தார். காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிக்கையை அதிகாரிகள் ஒட்ட முயன்றனர். 1, 2 மற்றும் 11வது வார்டுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை. இதற்கு, சுயேச்சை வேட்பாளர்களும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1,2 மற்றும் 11வது வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மூன்று சுயேட்சை வேட்பாளர்களுக்கும் அதற்கான சான்றிதழை வழங்க வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். சிலர் தீக்குளிக்க முயன்ற நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் நள்ளிரவில் கடம்பூர் பேரூராட்சியின் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும், விதிகளை மீறிய அதிகாரிகள் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.