காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தரக்குறைவாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக மாநிலங்களவை எம்.பி. புபேந்திர யாதவ் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். அதில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட்லி என்பதை ‘Jaitlie’ என்று குறிப்பிட்டு விமர்சித்து இருந்ததாக புபேந்திர யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
#BJPLies என்ற ஹேஷ்டேக்கில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ராகுல் இந்த ட்விட்டை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் பிரதமர் மோடி தேர்தல் உரையை சேர்த்து பதிவிட்டிருந்தார் ராகுல்காந்தி. நாட்டின் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி, அருண் ஜெட்லி இருவரும் பொய்கைகளை கூறிவருகின்றனர் என்று விமர்சிக்கும் வகையில் இந்தப் பதிவு இருந்தது. ’ஜெட் லை’ என்ற வாக்கியம் ஜெட்லியின் பொய்யுரைகள் என்பதை அர்த்தப்படுத்துவதற்காக ராகுல் பயன்படுத்தியிருந்தார்.
புகாரில் முகாந்திரம் இருப்பதால் நடவடிக்கை எடுக்கலாம் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார். ராகுல் காந்தி மக்களவை எம்.பி. என்பதால் சுமித்ராவிடம் இந்தப் புகார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.