மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக 2,350 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அசாம், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக பெய்த தொடர் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் மூழ்கிய பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமாகின. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அசாம், மணிப்பூர், நாகலாந்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அம்மாநிலங்களை சேர்ந்த முதல் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமான்ட்டா பிஸ்வா சர்மா, ‘மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக 2,350 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்’ என தெரிவித்தார்.