ரூ.2000 நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்னையை சமாஜ்வாதிக் கட்சியின் நரேஷ் அகர்வால் முதலில் எழுப்பினார். அவர் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கொள்கை முடிவுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்துநாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டியது அரசு பின்பற்ற வேண்டிய மரபு. அரசு ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கும் பணியை நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பி பேசிய எதிர்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், ரூ.1,000, ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடக செய்திகளை நம்புவதா? வேண்டாமா என்பது குறித்து அவையில் இருக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். குலாம்நபி ஆசாத்தின் இந்த கருத்துக்கு திமுகவின் திருச்சி சிவா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சரத் யாதவ், இதுபோன்ற செய்திகள் புதிய வதந்திகளைக் கிளப்பிவிடும். இதனால், 2,000 ரூபாய் நோட்டுகள் மூலம் செய்யப்படும் பணபரிமாற்றங்களை மக்கள் நிறுத்திவிடுவர். எனவே, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து விளக்கமளிக்க தயாரா என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அவையை நடத்திய துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கேட்டார். ஆனால், பதிலளிக்க அருண் ஜேட்லி மறுத்ததால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.