ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பாஜக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஆர்.கே நகரில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்த தேர்தல் ஆணையம் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் வாகனங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்த தேர்தல் ஆணையம் விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறி மாலை 5 மணிக்கு பிறகு பரப்புரையில் ஈடுபட்டதாக, தேர்தல் பார்வையாளர்கள் வீடியோ ஆதாரத்துடன் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்கே நகர் காவல்துறையினர் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.