ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். கடைசி இரண்டு நாட்களில் பிரச்சாரம் அனல் பறந்தது.
இதனிடையே, தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் சார்பில் போலீசாரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் மாறி மாறி புகார்கள் கொடுக்கப்பட்டன. இதனால் கடந்த முறை போல் கடைசி கட்டத்தில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இதன் மூலம் தேர்தல் ரத்தாகும் என்பது போன்று பரவி வரும் வதந்திகளுக்கு லக்கானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.