கங்கை ஆற்றிலிருந்து வழிதவறி கால்வாயில் சிக்கிய டால்பினை மீட்புக்குழுவினர் காப்பாற்றி ஆற்றில் விட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் பாரபன்கி மாவட்டத்தில் நேற்று ஷர்தா கால்வாயில் வழிமாறி வந்து சிக்கித்தவித்த 4.2 அடி நீளமுள்ள டால்பினை ஆமைகள் பராமரிப்புக் குழுவினர், வனத்துறையினருடன் சேர்ந்து மீட்டு, ஆற்றில் விட்டுள்ளனர்.
ஆமை சர்வைவல் அலையன்ஸ்(Turtle Survival Alliance -TSA) கால்வாயிலிருந்து டால்பினை மீட்டதுமுதல் ஆற்றில் பாதுகாப்பாக விட்டதுவரையிலான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
டால்பினின் முகத்தில் தண்ணீர் தெளித்து, பாதுகாப்பாக கொண்டுசென்று ஆற்றில் விட்டுள்ளனர். நீர்வாழ் வனவிலங்கு உயிரியலாளர் சைலேந்திர சிங்கும் இந்தப் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உபி பாரபன்கியில் கால்வாயில் சிக்கித் தவித்த டால்பினை மீட்பதைவிட நல்லவிஷயம் வேறு என்ன இருக்கப் போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலை செய்ததற்காக பலரும் மீட்புக்குழுவினரைப் பாராட்டிவருகின்றனர்.