1980-களில் முதல்வராக இருந்த எம்ஜிஆர், 10 அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது போல், ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய துணிச்சல் உண்டா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் முதற்கட்ட பரப்புரையின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
10 அமைச்சர்களை எம்ஜிஆர் பதவி நீக்கம் செய்தது ஏன்? அப்போது எம்ஜிஆர் அமைச்சரவையில் நடந்தது என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
"ஒரே நாளில் 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தவர் எம்.ஜி.ஆர், ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க தற்போதைய முதல்வருக்கு துணிச்சல் உண்டா?" என்பதுதான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் எழுப்பிய கேள்வி. இந்த பதிவின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு முன்னால் எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்துக்கு பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1984 முதல் 88 ஆம் ஆண்டு வரையிலான, தமிழகத்தின் எட்டாவது சட்டப்பேரவை ஆவணங்களை ஆராய்ந்தபோது, 1986ஆம் ஆண்டு அமைச்சர்களாக இருந்த ஆம்.எம். வீரப்பன், அரங்கநாயகம், காளிமுத்து, எச்.வி. ஹண்டே, வீராசாமி, நல்லுசாமி, எம்.ஆர்.கோவிந்தன், கோமதி ஸ்ரீனிவாசன், விஜயலட்சுமி பழனிசாமி, யூசுப் ஆகிய 10 பேரை அக்டோபர் 21ஆம் தேதி முதல் எம்ஜிஆர் பதவி நீக்கம் செய்திருந்தார்.
அந்த அதிரடி சம்பவம் குறித்து அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட எச்.வி.ஹண்டே-விடம் கேட்டபோது, 1986 இல் தமிழக சட்டப்பேரவையின் மேலவை கலைக்கப்பட்டது, அதனால் தனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவுடன், தமக்கு கட்சியில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கொடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.
10 அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து அப்போது எம்ஜிஆரின் அமைச்சரவையில் நீடித்த சு.திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, “அப்போது 10 பேரை ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 10 பேரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் என்பது உண்மையல்ல, அப்போதைய அமைச்சர் என்ற முறையில் இந்த கருத்து தவறானது என்று சொல்கிறேன்” என சொல்கிறார்.
இதுபற்றி கருத்து கூறிய பத்திரிகையாளர் ஷியாம் “1986 இல் அதிமுக ஜெயலலிதா ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டாக பிரிந்திருந்தது. அப்போது நடந்த நகராட்சி தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றது, அதற்காக காரணம் ஜெயலலிதா ஆதரவாக ஒரு அணி களத்தில் நின்றதுதான். சேலம் கண்ணன் என்ற முன்னாள் அதிமுக எம்.பி அதன் பின்புலமாக இருந்தார். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா எதிர்ப்பாளர், திருநாவுக்கரசு ஆதரவாளர், இப்படி அப்போது அதிமுக இரண்டாக பிரிந்திருந்தது. இந்தச் சூழலில் கட்சியின் இந்தப் பிளவை தடுக்கவும், தனது ஆளுமையை நிலைநிறுத்தவும் எம்ஜிஆர் செய்த அதிரடி காரியம்தான் இந்த 10 அமைச்சர்கள் நீக்கம்” என்கிறார்.
இந்த நீக்கத்துக்கு ஓராண்டுக்கு பின்னர் எம்ஜிஆருக்கு நெருக்கமான ஆர்.எம்.வீரப்பனுக்கு மட்டும் அமைச்சர் பதவியை கொடுக்கப்பட்டது.