பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி பவுலிங் செய்ய மிகவும் நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நேற்று பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் பெங்களூர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 83 மற்றும் 89 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுலின் கேட்சை கோட்டைவிட்டார் விராட் கோலி.
இதன் காரணமாக தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல் சதமடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் மிகவும் தாமதமாக பந்துவீசிக்கொண்டிருந்த பெங்களூர் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐபிஎல் "இந்தப் போட்டி தொடரின் விதிமீறல் இப்போது நடந்துள்ளது. பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக பெங்களூர் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.