ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!

ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
Published on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை சிறப்பாக வென்று குஜராத் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. தோல்வியுற்ற நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆடுவதற்காக ராஜஸ்தான் அணி அஹமதாபாத்திற்கு பறக்கவிருக்கிறது. ராஜஸ்தான் எங்கேயெல்லாம் இந்த போட்டியை கோட்டைவிட்டது?

ரஷீத்கானின் 4 ஓவர்கள்:

ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்திருந்தது. இது ஒரு நல்ல ஸ்கோர்தான். ஆனால், ராஜஸ்தானால் இந்த ஸ்கோரை இன்னமுமே அதிகரித்திருக்க முடியும். வாய்ப்பிருந்தும் அதை செய்ய தவறிவிட்டார்கள். ரஷீத்கான் வீசிய 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ரஷீத்கான் அபாயகரமான பௌலர்தான் ஆனால், அதற்காக Run a ball இல் ஓவருக்கு 6 ரன்களை கூட எடுக்காமல் விட்டது ராஜஸ்தானுக்கு பின்னடைவையே கொடுத்தது. ரஷீத்கானின் எக்கானமி ரேட் 3.8 மட்டுமே. இந்த சீசனில் அவரின் மிகச்சிக்கனமான ஸ்பெல் இதுதான். ப்ளே ஆஃப்ஸிற்கு முன்பு நடந்த 14 லீக் போட்டிகளில் மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே ரஷீத்கானின் எக்கானமி ரேட் 6 க்கும் கீழ் இருந்திருக்கிறது. மற்ற போட்டிகளிலெல்லாமே குறைந்தபட்சமாக 24 ரன்களையாவது கொடுத்திருக்கிறார். சில போட்டிகளில் பயங்கரமாக அடியும் வாங்கியிருக்கிறார். ராஜஸ்தானை பொறுத்தவரைக்கும் ரஷீத்கானிடம் இதுவரை யாருமே பம்மாத அளவுக்கு பம்மியிருக்கிறார்கள். இது ஒரு அதீத ஜாக்கிரதையான தற்காப்பான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது. 'ப்ளே ஆஃப்ஸில் ஆடும்போது உங்களுக்கு கொஞ்சமேனும் கூடுதல் தைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும். அதுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஆனால், இங்கே ராஜஸ்தான் அணியிடம் ரஷீத்கானை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையே இருப்பதாக தெரியவில்லை' என மேத்யூ ஹேடன் தனது ஆதங்கத்தை கமெண்ட்ரியில் வெளிப்படுத்தியிருந்தார். சாம்சன், பட்லர், படிக்கல், ஹெட்மயர் என இடது வலது வித்தியாசமின்றி அத்தனை பேருமே தற்காப்பாக மட்டுமே ஆடிக்கொண்டிருந்தனர். ரஷீத்கான் ஓவர்களில் Run a Ball இல் ஸ்கோர் செய்யப்பட்டிருந்தால் ராஜஸ்தானின் ஸ்கோர் 200 ஐ தொட்டிருக்கும். குஜராத் இந்த சீசனில் எந்த போட்டியிலும் 200 ரன்களை எடுத்ததில்லை. ப்ளே ஆஃப்ஸிலும் எந்த அணியும் 200+ ஸ்கோரை சேஸ் செய்ததில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரஷீத்கானின் ஓவரில் கொஞ்சம் அட்டாக்கிங்காக ஆடியிருந்தாலே குஜராத்தை இன்னும் சிரமப்படுத்தியிருக்க முடியும்.

பெரிய பவர்ப்ளே:

குஜராத் அணி சேஸிங்கை தொடங்கிய போது பவர்ப்ளேயில் அந்த அணி 64 ரன்களை எடுத்திருந்தது. இந்த சீசனில் பவர்ப்ளேயில் குஜராத் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 59 ரன்களை எடுத்திருந்தனர். அதுதான் அவர்களின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. எந்த போட்டியிலுமே பவர்ப்ளேயில் குஜராத் அணி 10 க்கும் அதிகமான ரன்ரேட்டில் ஸ்கோர் செய்ததே இல்லை. பவர்ப்ளேயில் குஜராத்தின் சராசரி ரன்ரேட் 7.6 மட்டும்தான். இந்த போட்டியில் இந்த கணக்கையெல்லாம் தாண்டி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்து 64 ரன்களை குஜராத் எடுத்திருந்தது. குஜராத் அணிக்காக பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்திருந்தவர் விருத்திமான் சஹா. அவரை போல்ட் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆக்கிவிட்டார். ஆனாலும், குஜராத் அணியின் ரன்வேகத்தை ராஜஸ்தான் பௌலர்களால் குறைக்க முடியவில்லை. சுப்மன் கில்லும் மேத்யூ வேடும் பவுண்டரிக்களாக அடித்து தள்ளியிருந்தனர். அதிலும் குறிப்பாக 5 மற்றும் 6 ஓவர் இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 33 ரன்களை குஜராத் எடுத்திருந்தது. போல்ட், அஷ்வின் என இரண்டு சீனியர் வீரர்களுமே இந்த ஓவர்களில் கடுமையாக சொதப்பியிருந்தனர். கடைசி 5 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவும் மில்லரும் நன்றாக செட்டில் ஆகி க்ரீஸில் நின்றிருந்தனர். பெவிலியனில் திவேதியாவும், ரஷீத்கானும் ரெடியாக இருந்தனர். இவர்களுக்கு 5 ஓவர்களில் 50 ரன்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஆக, பவர்ப்ளேயில் கொஞ்சம் நெருக்கி வீசி குஜராத்தின் சராசரியான 40-45 ரன்களுக்குள்ளேயே அவர்களை ராஜஸ்தான் சுருக்கியிருந்தால், டெத் ஓவர்கள் இன்னும் கடுமையாக மாறியிருக்கக்கூடும்.

எடுபடாத ஸ்பின்னர்கள்:

குஜராத் அணிக்காக ரஷீத்கான் வீசிய அந்த 4 ஓவர்கள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அதேமாதிரியே ராஜஸ்தான் அணிக்கு அஷ்வினும் சஹாலும் வீசிய ஓவர்கள் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில், ராஜஸ்தான் லீக் போட்டிகளில் வீழ்த்தியிருக்கும் 90 விக்கெட்டுகளில் 37 விக்கெட்டுகளை இவர்கள் மட்டுமே வீழ்த்தியிருக்கின்றனர். ஆனால், நேற்றைய போட்டியில் இவர்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை. எக்கனாமிக்கலாகவும் வீசவில்லை. இவர்கள் இருவரும் வீசிய 8 ஓவர்களில் மட்டும் 72 ரன்கள் சென்றிருந்தது. பவர்ப்ளேயில் அஷ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 17 ரன்கள் சென்றிருந்தது. ராஜஸ்தான் ரஷீத்கானை எப்படி எதிர்கொண்டது என்பதற்கும் குஜராத் பர்ப்பிள் கேப் வைத்திருக்கும் சஹாலை எப்படி எதிர்கொண்டது என்பதற்கும் இடையிலான வித்தியாசம் வெற்றி-தோல்வியில் முக்கிய பங்காற்றியிருப்பதாக தெரிகிறது. குஜராத் சஹாலின் 4 ஓவர்களை கண்ணை மூடிக்கொண்டு அட்டாக்கும் செய்யவில்லை அதீத ஜாக்கிரதையாக தற்காப்பாகவும் ஆடவில்லை. ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் என அடித்து அவரின் 4 ஓவர்களில் 32 ரன்களை சேர்த்திருந்தனர். இதேமாதிரியான அணுகுமுறைதான் ரஷீத்கானுக்கு எதிராக ராஜஸ்தானிடம் மிஸ் ஆகியிருந்தது.

கடைசி ஓவர் திக்...திக்:

கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற சூழலில் பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையுமே மில்லர் சிக்சராக்கியிருப்பார். ராஜஸ்தானுக்கு டெத் ஓவர் பௌலிங் ஒரு பலவீனமான விஷயமே. அந்த பலவீனம் நேற்று முழுமையாக அம்பலப்பட்டிருந்தது. கடைசி ஓவரை எப்படி வீச வேண்டும் என்கிற திட்டமிடல் ராஜஸ்தான் அணிக்கு இருந்ததா? சரியான திட்டப்படிதான் பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரை வீசினாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த 3 பந்துகளுக்கு முன்பாகவுமே சாம்சன் ஃபீல்ட் செட்டப்பை மாற்றி வேறு வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார். முதல் பந்தில் ஆஃப் சைடில் 4 ஃபீல்டர்களை நிறுத்தியிருந்தார். பந்து எப்படியும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேத்தான் வரப்போகிறது என்பதை உணர்ந்த மில்லர் பிரசித் கிருஷ்ணாவின் கையில் பந்து ரிலீசாகும் போதே ஆஃப் சைடில் நகர்ந்து வந்து லெக் சைடில் மடக்கி சிக்சர் அடித்திருப்பார். இரண்டாவது பந்துக்கு முன்பாக அந்த ஆஃப் சைடு ப்ளானை உதறிவிட்டு சாம்சன் டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட் விக்கெட்டில் எல்லாம் ஃபீல்டர்களை வைத்தார். இந்த முறை சரியாக ஸ்டம்ப் லைனில் பந்து வர அதை நின்ற இடத்திலிருந்தே சிக்சராக்கியிருந்தார். மூன்றாவது பந்துக்கு முன்பாக மீண்டும் ஒரு ஃபீல்டிங் மாற்றம். டீப் ஃபைன் லெக், டீப் தேர்டுமேன், டீப் ஸ்கொயர் லெக், டீப் பாய்ண்ட் என ஒரு ஷார்ட் பாலுக்கான வியூகத்தோடு ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முதல் இரண்டு பந்துகளிலுமே ஃபீல்டர்களின் மாற்றத்தை வைத்தே மில்லர் இப்படியான பந்துதான் வரப்போகிறது என்பதை முன்னமே கணித்து சிக்சராக்கியிருந்தார். இந்த பந்தில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்து ஷார்ட் பாலுக்கு ஃபீல்ட் வைத்துவிட்டு ஒரு யார்க்கர் டெலிவரியை வீச முயல அது சரியாக ஸ்லாட்டில் விழுந்தது. சிக்சர் அடிப்பதற்கென்றே சௌகரியமாக வந்துவிழும் அந்த பந்த மில்லர் விடுவாரா? அதுவும் சிக்சராகவே மாறியது. சாம்சன் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் இன்னமும் ஒருங்கிணைந்து தெளிவான திட்டமிடலோடு நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் போட்டி கடைசி பந்து வரைக்குமே கூட சென்றிருக்கும்.

முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸூக்குள் நுழைந்த குஜராத் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டி வரை செல்வதே மாபெரும் சாதனைதான் ஒரு அணியாக முழுமையாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அதற்கு கிடைத்த பலன் தான் இந்த இறுதிப்போட்டி.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com