தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குறியது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆளுங்கட்சியை விமர்சிக்கும் ‘சர்கார்’ திரைப்பட நடிகர், இயக்குநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேட்டி அளித்தார். மேலும் ‘சர்கார்’ படத்திற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ’சர்கார்’ படத்தை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்ப கோரியும் படத்தின் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ திரையிடும் அனைத்து திரையிரங்கத்தின் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் விஜயின் பேனர்களையும் கிழித்தனர்.
இந்நிலையில்,தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் எனவும் இத்தகைய செயல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.