அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் அரசியலுக்கும் அவருக்கும் உள்ள கடந்தகால தொடர்பு குறித்து தெரிந்து கொள்வோம்.
நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலில் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது 1996 சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தனியாக ஒரு மூன்றாவது அணி போட்டியிடவேண்டும் என ரஜினிகாந்த் விரும்பினார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணியை தொடர்ந்தபோது, அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என ரஜினி அறிவித்தார். திமுகவுக்கும், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் ஆதரவை அறிவித்தார். திமுக வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்தின் ஆதரவும் காரணமாக இருந்தது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதையடுத்து அவரது அரசியல் வரவு குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்களும் பாடல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் தூண்டுபவையாக அமைந்தன. இதன்பிறகு 2002ஆம் ஆண்டில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி திரைத்துறையினர் நெய்வேலியில் நடத்திய போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் தனியாக காவிரி நீருக்காக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். காவிரி பிரச்னை தொடர்பாக மக்கள் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்த அவர், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 1 கோடி ரூபாய் தருவதாகவும் கூறினார். எனினும் தன்னை ஒரு அரசியல் தலைவராக பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
பின்னர் 2004ஆம் ஆண்டில் அதிமுக -பாரதிய ஜனதா கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். நதிகள் இணைப்புக்கு உழைப்பதாக இந்த கூட்டணி வாக்குறுதி அளித்ததால் ஆதரவு அளித்ததாக அவர் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 2008ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் திறமையும், அனுபவும், உழைப்பும் மட்டும் அரசியலில் நுழைவதற்கு போதும் என நினைப்பது முட்டாள்தனமானது எனக் கூறினார். நேரம் சரியாக இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன்பிறகு அவர் திரைப்படங்களில் அரசியல் ரீதியான வசனங்கள் இடம்பெற்றாலும் அவர் ரசிகர்களை சந்திப்பதையும், அரசியல் குறித்து பேசுவதையும் தவிர்த்து வந்தார். தேர்தல் நேரங்களில் ரசிகர்கள் தங்கள் விருப்பம்போல் வாக்களிக்கலாம் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழகம் வந்த நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கே சென்று சந்திதார். எனினும் இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.அந்த ஆண்டில் ஜெயலலிதா சிறையிலிருந்து திரும்பிய போது அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
இதன்பிறகு அவரது ஆதரவைப் பெற பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏபரல் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் ரஜினிகாந்தை சந்தித்தார். ஆனால் தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என ரஜினிகாந்த் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் டிசம்பர் 26ஆம் நாள் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31ஆம் நாள் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி அரசியலில் இறங்குவது உறுதி என்றும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தனிக்கட்சித் தொடங்கி தனித்து தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்து நீண்ட கால கேள்விக்கு விடையளித்துள்ளார்.