அன்றாட பிரச்னைகளுக்கு பதில் சொல்லமாட்டேன் என எத்தனை முறை சொல்வது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இமயமலைக்கு யாத்திரை சென்றிருந்த ரஜினி காவிரி பிரச்னை குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து தான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறினார். மேலும், ‘நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை; கட்சிக் கூட இன்னும் தொடங்கவில்லை. அதனால், அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார்.
எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொடுப்பேன் என சூடாக சென்னையில் பேசிய ரஜினி, முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்ற ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை ரஜினி சந்தித்த போது, காவிரி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் ரஜினி பதில் சொல்லாமல் இருக்கிறார் என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, “டிசம்பர் 31 ஆம் தேதியே சொன்னேன். நான் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை என்று. இறங்கிய பிறகு நீந்திதான் ஆகவேண்டும். அதுவரைக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று அப்போதே சொன்னேன். இன்னும் எத்தனை முறைதான் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை” என்றார்.