நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்க உள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாகத் தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு திருப்தியில்லை, ஏமாற்றம் தான் என கூறியிருந்தார். ரஜினிகாந்தின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பெருளாக மாறியது.
இந்நிலையில், இன்று மீண்டும் அவர் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், இன்று 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக தேசிய ஊடங்கங்கள் பெரும்பாலானவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நிச்சயம் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.